Followers

Monday, December 10, 2007

சிவனும் வரதட்சணை வாங்காமல் இருக்க முடியாது.

சிவன் தந்த வரதட்சணை! -----ARTICLE BY சு. அறிவுக்கரசு

வரதட்சணை மணமகனுக்கு மணமகளின் தந்தை தரும் தட்சணை. தரவேண்டிய தட்சணை. ஆரிய பழக்கம்.தமிழர் பழக்கம் நேர் மாறானது.

பெண்ணைப் பணம் கொடுத்துப் பரிசம் போட்டு மணந்துகொள்வது தமிழர் முறை. பரிசம் பணம் ஆணின் தந்தை தருவார், ஆணே தருவார். பரிசுப் பணத்தை முலைப் பணம் என்று இலக்கியங்கள் கூறும்.

ஆரியப் பண்பாட்டுத் திணிப்பால் விளைந்த பல கேடுகளில் வரதட்சணையும் ஒன்று. பெண்ணைக் கேவலப்படுத்தும் பழக்கம். பல குடும்பங்களைச் சீரழித்த, சீரழித்துக் கொண்டிருக்கும் பழக்கம். பார்ப்பனர்களைப் பார்த்துத் தமிழர்கள் `காப்பி’ அடித்துக் கொண்டிருக்கும் பழக்கம்.பார்ப்பனர்கள் பண்ணாத கொடுமைகளைச் சூத்திரத் தமிழர்களைப் பண்ண வைக்கும் பழக்கம்.

படித்தவர்கள் எனப்படும் ``முட்டாள்’’களையும் பிடித்து ஆட்டிக் கொண்-டிருக்கும் பழக்கம்.இந்தப் பழக்கத்தினால் பாழாகும் குடும்பங்கள் கணக்கில் அடங்காத அளவுக்கு அதிகம்.

இந்த நிலை, பல்கலைக் கழகத் துணை வேந்தர்களாக இருந்தவர்கள், இருப்பவர்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாரையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது.
கொடுமைகள் புரிய வைக்கிறது.
கொலை செய்ய வைக்கிறது. தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள வைக்கிறது.

உயிர்கள் பறிக்கப்பட்ட பின்னும் யாருக்கும் அறிவு வரவில்லை.சட்டம் தண்டித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் வரதட்சணைக் கொடுமைகளும் குற்றங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. தூக்குத் தண்டனைகளுக்குப் பிறகும் கொலைகள் நடைபெறுகின்றன, அல்லவா,

அதைப்போல!இந்தக் கொடுமைகளில் ஒரு கொடுமை தொடர்பான வழக்கு. சில நாள்களுக்கு முன்பு நம் நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்காக நடைபெற்று ஆணை வழங்கப்பட்டது. இதைத் ``தீர்ப்பு’’ என்று எழுத முடியவில்லை. மனம் வரவில்லை. ஏனென்றால், எந்தச் சட்டப் பிரிவின் படியும் அதன் வாதங்கள் பொருந்தி வரவில்லை.குடும்பம் நடத்துவதற்குப் பணம் வேண்டும், இந்தப் பொருள் வேண்டும், அந்தப் பொருள் வேண்டும் என்று மாமனாரை மருமகன் கேட்பது குற்றமல்ல என்பதுதான்

ஆணை.நீதிபதியின் மனோபாவம் எத்தகையது என்பதை நாம் தெரிந்துகொள்ள இது உதவும். பின் எப்படி, இந்தச் சமூகச் சீர்கேடு ஒழியும்? ஒழிக்க முடியும்?

சமூக அக்கறை கொண்டவர்கள் கேட்டுக் கொள்ளவேண்டும். கேட்க வேண்டும். வழி காண வேண்டும்.

சிவன் வாங்கிய வரதட்சணை! சைவர்களின் கடவுளாகிய சிவன் வரதட்சணை வாங்கியதாம். இந்துக் கடவுள் என்று சிவனைக் கூறலாமா? கூறினால் இந்துக்கள் என்று கூறிக் கொள்ளும் வைணவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

கிருஷ்ணனை மட்டுமே கும்பிட்டுக் கிடக்கும் மாத்வர்கள் ஏற்றுக் கொள்வார்களா? சீரங்கமும் அகோபிலமும், திருப்பதியும், உடுப்பியும் ஒத்துக் கொள்ளாத போது, சிவன் எப்படி இந்துக் கடவுளாக முடியும்?எந்நாட்டவர்க்கும் இறைவா என்கிறார்களே, இந்நாட்டிலேயே மூன்றில் இரண்டு பேர்களுக்கு சிவன் கடவுள் இல்லையே! வாசகங்களை மாற்ற வேண்டாமா? லோக குரு போன்ற மோசடியாக இருக்கிறதே!

அதைவிடுத்துப் பிரச்சினைக்கு வருவோம்.சிவனும் வரதட்சணை வாங்கியிருக்கிறது. பார்வதி தவிர வேறு ஒரு பெண்ணையும் சிவன் திருமணம் செய்து கொண்டிருக்கிறது. கங்கை ஏன் கணக்கில் சேர்க்கவில்லை எனக் கேட்கிறீர்களா?

கங்கையைத் தலையில் மறைத்து வைத்துக் கொண்டு, சும்மா ``ஜஸ்ட் லைக் தட்’’ வைத்துக் கொண்டிருக்கிறது. அம்மி மிதித்து, அருந்ததி காட்டிக் கட்டிக் கொள்ளவில்லை.

அதனால், மாதங்கியைத் திருமணம் செய்து கொண்டதுதான் கணக்கு!மாதங்கர் எனும் ஒரு முனிவர். இவர் பிரம்மாவின் மகன், தவம் இருந்து வந்தபோது, குளிக்கும் மணிக் கருணை ஆற்றில் மிதந்து வந்த குழந்தையை எடுத்து வளர்த்து ஆளாக்கி வந்தார். இதை கட்டிக் கொள்ளுமாறு சிவனைக் கேட்டார். சிவனும் வந்து மதங்கனின் மகன்(?) மாதங்கியை மணம் புரிந்துகொண்டது.

திருமணம் நம் தஞ்சை மாவட்டம் திருவெண்காட்டில்தான் நடந்தது.சீர் வரிசை எதுவும் தரவில்லை மாதங்க முனி. இதுவும் வரதட்சணை ஏதும் கேட்கவில்லை. ஆனாலும் சுற்றி இருக்கும் ``சொந்தங்கள்’’ எத்தனை பேர் தெரியுமோ?முப்பத்து முக்கோடிப் பேர்! ஆமாம், முப்பத்து முக்கோடித் தேவர்களும்தான் சொந்தங்கள்.48 ஆயிரம் ரிஷிகள் பெண் வீட்டார் என்றால் அவர்களைக் கணக்கில் சேர்க்கவில்லை. அஷ்டத்திக்குப் பாலர்கள், கின்னரர், கிம்புருடர், நந்தி போன்ற துக்கடாக்கள் பற்றி விவரம் இல்லை.

நாகூர் ஆண்டவர், வேளாங்கண்ணி மாதா ஆகியோர் பற்றியும் கணக்கில் இல்லை. இந்த இரண்டு பேரும் திருமண காலத்தில் இருந்தார்களோ, என்னவோ?

இந்து முன்னணிக்காரர்களைத்தான் கேட்கவேண்டும்.சொந்தங்கள் சொல்லிக் காட்டின. வெறுங்கையோடு வந்தவள் என்று மாதங்கியைச் சொற்களால் வாட்டி வதைத்தனவாம்.

இழிவாகப் பேசின. தாங்கமுடியாமல் மாதங்கி, தன்னைத் தொட்டுத் தாலிகட்டிய சிவனிடம் கூறினாள். சிவன் தன் சொந்தங்களிடம் உபதேசம் செய்தது. வரதட்சணை வாங்குவது பாபம் எனக் கூறியது. சொந்தங்கள் கேட்கத் தயாராக இல்லை.வேறு வழியில்லை சிவனுக்கு! தன் செல்வத்தின் ஒரு பகுதியை எடுத்து வரச் சொல்லியது. நந்தி எடுத்து வந்தது. ஆமாம்,

சிவனுக்கு எது செல்வம்? அதுதான் வெறும் புலித் தோலை இடைக்கணிந்து சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு மண்டை ஓட்டில் பிச்சை வாங்கித் தின்னும் பரதேசியாயிற்றே!

ஏது பணம்?இன்சூரன்ஸ் தொகையாக ஆண்டு ஒன்றுக்கு 36 ஆயிரம் கட்டும் பிச்சைக்காரிபற்றி ``விடுதலை’’ செய்தி போட்டதே, அது போன்ற பிச்சாடனனா சிவன்?

ஆக, தன் பணத்தை தன் மனைவி சார்பாக தரச் செய்து, வரதட்சணையாக வாங்கிக் கொண்டு, சொந்தங்களின் வாயை அடைத்துவிட்டதாம், சிவன்!

``வெல்லத்தில் விக்கிரகம் செய்து, அதில் கொஞ்சம் கிள்ளி நைவேத்யம் செய்து’’ ``என்பார்களே அதுபோல, கொடுத்ததும் இதுவே, எடுத்துக் கொண்டதும் இதுவே!

நல்ல வேடிக்கை. கடவுள் கதை இது. அதிகமாக ஆழப் போனால் மனம் புண்படும் இந்துக்களுக்கு! இத்தோடு நிறுத்திவிடுவோம்!

கதை சொல்லும் நீதி என்ன? கதை என்றாலும் புண்ணாகிவிடும் இந்துக்களுக்கு! நடந்தது, புராணத்தில் எழுதப்பட்டுள்ளது என்று எழுதவேண்டும் என்பார்கள்!

சரி, நீதி என்ன? வரதட்சணை வாங்காமல் கடவுளாலும் இருக்க முடியாது; வாங்காமல் கல்யாணம் கட்டிக் கொண்டால் சொந்தங்கள் விடாது. சொந்தங்களுக்கு சமாதானம் கூறக் கடவுளாலும் முடியாது. கடைசியில் கடவுளாலும் வரதட்சணை வாங்கித்தான் தீரவேண்டும். விதியை யாரும் மீறக்கூடாது.பின் ஏன், பிள்ளையைப் பெற்ற பிசாசுகள் பேயாய் அலையாது, வரதட்சணைக்கு? >> http://viduthalai.com/20070326/news05.htm
---------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: