Followers

Thursday, December 6, 2007

19ஆம் நூற்றாண்டும், பகவத் கீதையும் !

பகவத்கீதை முழுவதற்குமே பொருள் சொல்லி போற்ற முயன்றிருந்தால் அது அன்றே நிராகரிக்கப்பட்டு இருக்கும், பகவத் கீதையை கொண்டுவந்தால் அதன் பிறகு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை!!!

இந்திய மண் முழுவதும் அந்நியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்தபோது அதிலிருந்து விடுபடுவதற்கு இந்தியர்களை ஒன்றுபடுத்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடுவதற்கு பொதுவான விடயம் ஒன்று தேவைப்பட்டதை, விடுதலைப் போராட்டத்தில் போராடிய மகாத்மா காந்தி உட்பட அனைத்துத் தலைவர்களும் உணர்ந்தனர்.

இந்தியர்களை குறிப்பாக பெரும்பாண்மை என்ற சொல்லாடலில் வைத்திருக்கும் இந்துக்களை ஒன்றுபடுத்துவதென்றால் பொதுவாக எதாவது ஒரு அம்சம் இருக்க வேண்டும். அது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும், மேலும் அதை முன்னிலைப்படுத்திப் போராடினால் அது ஊக்கம் தருவதாக இருக்க வேண்டும் என்று நினைத்தனர்.

இந்த தேடலில் திடீர் ஞான உதயமாக காட்சி கொடுத்ததுதான் பகவத் கீதை.

19 ஆம் நூற்றாண்டுக்கு முன் பகவத் கீதை என்பது ஒரு உபநிடத நூல் என்ற அளவில் மிகச் சிலரால் பொத்தி பொத்தி உயர்வாக பேசப்பட்டு வந்திருந்தது. நாடுமுழுவதும் பேசப்படாத, மொழி பெயர்க்கப்படாத நூலாகவே அது இருந்தது. அதைத்தாண்டி பகவத் கீதையின் தேவை வாழ்வியலுக்காகவோ வேறு எதற்காகவோ பயனளிக்கக் கூடியது என்று ஆராய்ச்சி எல்லாம் எவரும் செய்யவில்லை.

மேலும் பகவத் கீதை அன்றாடத் தேவைக்கு மிக அவசியம் என்ற காரணம் சமூக காரணங்கள் இருக்கவில்லை.பகவத்கீதையின் ஒரு சிறப்பு அம்சம், வேதத்தை நம்பும் வைதீகத்தின் கருத்துக்களை அது உள்வாங்கி இருக்கிறது என்பதால் வைதீக பிராமணர்களாலும் அது சிறப்பிக்கப்பட்டது.

அதே போன்று கிருஷ்ணர் அருளியது என்ற தோற்றம் இருப்பதால் வைணவர்களாலும் போற்றப்பட்ட பொதுவான நூலாக அது இருந்தது. இந்த இரு அம்சங்களை முதலில் கருத்தில் கொண்டுவந்த விடுதலைப் போராட்ட இந்து அமைப்பினர், அதை முன்னிலைப்படுத்துவது என்ற முடிவுக்கு வந்தனர்.

இது மட்டும் போதுமா ? இது வெறும் வைதீக மரபினரை மட்டுமே திருப்தி படுத்தும் என்பதால், மேலும் அதற்கு புனித நூல் அங்கீகாரம் கொடுத்தால் தான் அவற்றை மற்ற இந்து சமயத்தை உள்ளடக்கிய பிற சமயத்தினரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று கருதினர்.

ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட நீதிமன்றத்தில் சத்திய உறுதி ( பிரமாணம்) ஏற்பது என்பது வழக்கு நடக்கும் போது முதலில் செய்யப்படும் ஒரு முறை (சம்பிரதாயம்). இதன் மூலம் தாம் கடவுளின் பெயரால் சொல்வதெல்லாம் உண்மை என்று ஆரம்பித்து அதன் அடிப்படையிலும், சாட்சியங்களின் அடிப்படையிலும் நீதி வழங்கப்படுகிறது. ஏற்கனவே புனித நூல் என்ற அந்தஸ்தை கிறித்துவ பைபிள் பெற்றிருப்பதால் கிறிஸ்துவர்களுக்கும், குரானை புனித நூலாக கொண்டுள்ள இஸ்லாமியர்களுக்கோ எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் இந்துக்கள் என்று வரும் போது ஒரு புனித நூல் என்பது இருந்து அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் மட்டுமே அவை நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் என்ற நிலை அன்றைய நீதீமன்றங்களில் இந்து வழக்குகளுக்கு அவசியமானதாக இருந்தது.இந்த சூழ்நிலையில் பகவத்கீதையை புனித நூல் என்று பொதுப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று இந்து தலைவர்கள் முடிவு செய்து பகவத்கீதையை முன்னிலைப்படுத்த பல்வேறு இந்திய மொழிகளில் உரை எழுத தலைப்பட்டனர்.

காந்திஜி, இராஜாகோபால் ஆச்சாரியார், கோபால கிருஷ்ண கோகலே மற்றும் நம் பாரதியாரும் வந்தே மாதிரத்தை மொழி பெயர்த்தவுடன் கீதையை மொழி பெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு இந்து சமயத்தில் சைவம் - வைணவம் என்று பெரிய எதிர்ப்பு எதுவும் வராததால் பகவத் கீதை புனித நூலின் சிறப்புத் தகுதியை பெற்றது.பகவத்கீதை முழுவதற்குமே பொருள் சொல்லி போற்ற முயன்றிருந்தால் அது அன்றே நிராகரிக்கப்பட்டு இருக்கும்,

ஏனென்றால் 'நான்கு வர்ணங்கள் என்னிடமிருந்தே தோன்றியதாகவும், யார் யார் ? எங்கிருந்து பிறந்தார்கள்' என்றும் கண்ணன் அதில் ஆணித்தரமாக சொல்கிறான்.

எனவே அவற்றைத் தவிர்த்து கர்மயோகத்தில் காட்டியுள்ள 'செயல்கள்' குறித்து மட்டுமே விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. 'கடமையை செய், பலனை எதிர்பாராதே' என்ற வாக்கியம் முன்னிலைப் படுத்தப்பட்டது.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடுவது என்பது கடமை என்றும் போராடுபவர்களே சத்திரியர்கள், 'வெற்றித்தோல்வி பற்றி எண்ணம் எதுவுமின்றி போராட்டம் ஒன்றையே குறிக்கோளாக் கொள்ள வேண்டும்' என்று இந்து போராட்ட வீரர்களுக்கு அது உபதேசமாக்கப்பட்டது.

ஏனென்றால் அப்போதும், எப்போதும் இருப்பது போலவே இஸ்லாமிய - இந்து சண்டைகள், கிறித்துவ - இந்து சண்டைகள் இருந்தன. அவர்கள் புனிதப்போர் என்று புனித நூல்களின் மேற்கோளைக் காட்டிப் போரிடும் போது அதே செயல் (உத்)வேகம் இந்து மதத்து இளைஞர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதற்காக பகவத்கீதை புனித நூலாகவும் கர்மயோக கோட்பாடுகள் போரைப்பற்றிய தெளிவு கொடுப்பதற்கும் பயன்பட்டது.
**********************
இவையெல்லாம் சுதந்திர போராட்டத்துக்கு முந்தைய கீதைப்பற்றி மக்கள் மத்தியில் முன் வைக்கப்பட்ட கருத்துக்கள். கீதைவழி - எதிர்பார்தது போலவே இந்து இளைஞர்களின் எழுச்சியாலும் விடுதலை போராட்டம் வெற்றி பெற அதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

அதன் பிறகு அது இந்து வெறியாகவும் மாறியது, முடிவில் ?
மகாத்மாவே கொலை செய்யப்பட்டார்.

இன்றைய தேவை என்று பகவத் கீதையில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு குறிப்பாக இந்துக்களின் ஒருமைப்பாட்டுக்கு எந்த விடயமும் இல்லை.

தமிழக இந்துக்களுக்கு கீதையோ, வேறு வடமொழி நூல்களோ புதிதாக எதுவும் சொல்வதற்கு என்று ஒன்றுமே இல்லை எனலாம்.சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம், கெளடில்யர் எழுதிய தர்ம சாஸ்திரம், வாத்ஸ்யாயனர் எழுதிய காம சாஸ்திரம் ஆகிய மூன்றிற்கும் முன்பே முப்பாலும் ஒருங்கே இணைந்த ஐயன் வள்ளுவனின் அழகு குறள்கள் நமக்கு இருக்கின்றன.

'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்றுரைக்கும் திருமூலச் சித்தரின் திருமந்திரத்தை விடவும், சைவர்கள் மூவர் அருளிய தேவரம்,திருவாசகத்தை விடவும் வைணவர்களின் நாலாயிரம் திவ்யபிரபந்தத்தை விடவும் பக்தியை வளர்க்க கீதை எந்த விதத்திலும் பயனளிப்பதாக நான் கருதவில்லை.

பகவத்கீதை - இதில் மனு என்ற அரக்கன் மறைவாக பதுங்கி இருந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிறப்பை வைத்து இழிவுபடுத்தவும், பிறப்பின் அடிப்படையில் 'தகுதிகள்' பற்றி பேசவும் கண்விழித்துக் காத்துக் கொண்டிருக்கிறான்.

இதற்குமேலும் தமிழக இந்துக்கள் கீதையை போற்ற ஆரம்பித்தால் அதில் மறைந்துள்ள வர்ண சூட்சமத்தை சூரணமாக்கி தின்று அந்த தெம்பில் வெளியே வந்து பயமின்றி நடனமே ஆடுவான்.

புனித நூல் என்பதால் சில கருத்துக்களில் உடன்பாடு (சமரசம், காம்ரமைஸ்) செய்து கொள்ளலாம் என்று நினைத்து அலட்சியமாக இருந்தால் மனுவென்ற அரக்கன் கீதையின் (கிருஷ்ணனின்) ஆதரவு நிழலில் படுத்துக்கிடக்கும் ஆதிசேசன் போன்றவன். எந்த நேரத்திலும் அவன் விஷம் கக்கினால் மீண்டும் நாமெல்லாம் சூத்திரர்கள் ஆக்கப்படுவோம் என்ற ஆபத்து நிறையவே இருக்கிறது.

சூத்திரன் - இதன் பொருள் வேசி மகனா ? இழிபிறவியா ? மனுவில் உள்ள குறிப்புப்படி அப்படித்தான் பொருளாம் !!!

எதைக் கொண்டுவந்தாய் எதை இழப்பதற்கு ?

பகவத் கீதையை கொண்டுவந்தால் அதன் பிறகு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை!!!

இன்று உன்னுடையதாக இருப்பது (அதாவது நீ மீட்டுக் கொண்டது ?) நாளை வேறு ஒருவருடையது ஆகும் ! :))

அதன்பிறகு பெறுவதற்கென்று எதாவது கிடைத்தால் தானே இழப்பைப் பற்றி பேச முடியும் ? :( ---------- நன்றி:>> govikannan
சுட்டி:>>
http://govikannan.blogspot.com/2007/08/19.html
---------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: