Followers

Saturday, June 2, 2007

புராணங்களைப் புரிந்து கொள்ளுங்கள்

உலகம், உயிர்கள் உருவானவை என்பது அறிவியல், ஆராய்ச்சி . உருவாக்கப்பட்டவை என்பது மதக் கருத்து. எல்லா மதங்கள் என்பவையுமே இக்கருத்தையே கொண்டிருக்கின்றன. ஆனாலும் இந்து மதம் சற்று வேறுபாடானது. இதில் புராணங்கள் உண்டு. 18 புராணங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைப் புளுகுகள். இந்த உலகம், உயிர்கள் ஆகியவற்றின் ``படைப்பு’’பற்றி ஒவ்வொரு புராணங்களும் ஒவ்வொரு விதமாகப் புளுகிக் கொண்டுள்ளன.

உலகின் அமைப்பு பற்றிப் புராணப் புளுகுகளைப் பார்ப்போம். முதலில் பிரம்ம புராணம்பூ மண்டலப் பிரிவுகள் : பூ மண்டலம் ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றைச் சுற்றி ஏழு வகையான சமுத்திரங்கள் உள்ளன. ஏழு வகையான பர்வதங்கள் உள்ளன.பாரத வர்ஷம் எனப்படும் நம் நாடு எட்டுப் பிரிவாக உள்ளது. இந்திரத் தீவு, சுசேருமனத்தீவு, தாம்ரபரணத் தீவு, கபஸ்தி மானத்தீவு, நாகத்தீவு, சவம்யத் தீவு, காந்தர்வத் தீவு, வாருணத்தீவு என்பவை பாரதம். ஒன்பதாவது பகுதி கடலில் மூழ்கிவிட்டது. பாரத வர்ஷத்தின் கிழக்கில் கிராதர்களும், மேற்கில் யவனர்களும் உள்ளனர்.பூமிக்கடியில் அதலம், விதலம், நிதலம், சுதலம், தலாதலம், ரஸாதலம், பாதாளம் என்று ஏழு உலகங்கள் உள்ளன. இவற்றில் தைத்தியர்கள், தானவர்கள், நாகர்கள் ஆகியோர் வசிக்கின்றனர்.

இந்தப் பாதாள லோகங்கள் மிகவும் அழகியவை. இங்கு பொன்னும் பொருளும் குவிந்து கிடக்கின்றன. இங்கேயும், காடு, பறவைகள் போன்ற ஜீவராசிகளும் நிறைந்துள்ளன என்று நாரதர் கூறினார்.பூமண்டலப் பகுதியாக பல நகரங்கள் அமைந்துள்ளன. இதற்கெல்லாம் தலைவன் யமதர்மராஜன். அவரவர் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப இங்கு ஜீவன் தண்டிக்கப்படுகிறது. பாவப் பிராயச் சித்தம் செய்தவர்களும் புனிதர்களும் நரகங்களுக்குச் செல்லார். ஸ்ரீ கிருஷ்ணனைத் தியானிப்பதே சிறந்த தவமாகும்.

மண்ணிலிருந்து விண் வரை பரவியிருப்பது இப்பூமி. புவர் லோகம் இதில் ஒரு பகுதி. மற்றும் வரிசையாக சூரிய மண்டலம், சந்திர லோகம், புதன், சுக்கிரன், அங்காரகன், குரு, சனி, சப்தரிஷி மண்டலம், துருவ லோகம் என்று பல பிரிவுகள் உள்ளன. கல்ப முடிவில் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் மட்டும் அழியும்.இதே செய்தியை விஷ்ணு புராணம் கூறுவது

கீழே உள்ளவாறு:பாதாள லோகம்பூமிக்குக் கீழே, அதலம், விதலம், நிதலம், சுபஸ்திமத், மஹாதலம், ஸுதலம், பாதாளம் என்று ஏழு உலகங்கள் ஒன்றன் மேல் ஒன்றாய்த் தட்டுகள் போல் அமைந்துள்ளன.ஒரு சமயம் நாரத முனிவர் பாதாளத்திலிருந்து சொர்க்கத்திற்கு வந்து தேவ சபையில் இந்திரனிடம் பாதாள லோகம் பற்றி விரித்துரைத்தார். அது நாகரிக நிலையில் மிகச் சிறந்தது. சொர்க்கத்தைக் காட்டிலும் அழகுடையது. விரக்தி அடைந்தவர்கள்கூட அதனை விரும்புவர். அங்கு இனிய மங்கல ஒலிகள், ஆடல், பாடல் போன்ற போகப் பொருள்கள் உள்ளன. இங்கு, தைத்ய, தானவ, நாக ஜாதியர் வசிக்கின்றனர்.

இந்தப் பாதாள லோகத்திற்கு நெடுந்தொலைவில் ஆதிசேஷன் இருக்கிறார். அவர் விஷ்ணுவின் திருமேனியாய் விளங்குகிறார். ஆயிரம் தலைகள் கொண்டவர் அவர். உடல் போன்ற மலை கொண்ட திருவரையில் நீலப்பட்டாடை உடுத்தியும், வெண்மையான முத்து மாலைகளை அணிந்தும் விளங்குகிறார்.இரு புறங்களிலும் சாந்தி தேவியினாலும், வாருணீ தேவியினாலும் உபாசிக்கப்படுகிறார். இவர் எல்லா பூ மண்டலங்களையும் தாங்கிக் கொண்டு பாதாளத்தின் அடியில் இருக்கிறார். அவருடைய ஆற்றலை அறிந்தவர் யாருமிலர்.

அவர் கொட்டாவி விடும்போது மலை, காடு, கடல் கொண்டு நிலம் நடுக்கம் பெறுகிறது. இவ்வாறு பற்பல லோகங்களைத் தாங்கும் பூமியை ஆதிசேஷன் தாங்குகிறார்.பல வகை நரகங்கள்பாப பலன்களை அனுபவிக்கும் இடம் நரகங்களாம். அவை பலவகை. ரவுரவம், ஸுகரம், ரோதம், தாலம், விசஸநம், மஹாஜ்வாலம், தப்த கும்பம், லவணம், விலோஹிதம், ருதிராம்பஸ், வைதரணி, க்ருமிசம், க்ருமிபோஜனம், அஸிபத்ரவனம், க்ருஷ்ணம், மிகக் கொடிய லாலாபக்ஷம், பூயவஹம், அக்னி ஜ்வாலம், அதச்சிரஸ், ஸந்தம்சம், க்ருஷ்ணஸுத்ரம், தமஸ், அவீசி, ச்வபோஜனம், அப்ரதிஷ்டம் முதலியன. மேலும் பல கொடிய நரகங்களும் உண்டு நரகங்கள் யமனின் ஆளுகைக்கு உட்பட்டவை. இவை அக்கினிபயம், ஆயுத பயம் கொண்டு பாவிகளைத் தண்டிக்கின்றன.சூரிய, சந்திரர்களால் ஒளி பெற்று, கடல், ஆறு, மலை ஆகியவை கொண்ட பாகம் பிருதிவீ (அ) பூலோகம் என்றுஅழைக்கப்படுகிறது.

இந்தப் பூமியின் பரப்பளவு தூரம் மேலே உள்ளது. `புவர் லோகம்’. பூமிக்கு மேல் லக்ஷம் போஜனை தூரத்தில் சூரிய மண்டலம் உள்ளது. அதற்கு மேல் அதே அளவு தூரத்தில் சந்திர மண்டலம், அதே போல் அதற்கு மேலே நக்ஷத்ர மண்டலம், அதற்கு மேல் புதன், அதற்குமேல் சுக்கிர மண்டலம், அதற்குமேல் அங்காரக மண்டலம், பிருஹஸ்பதி மண்டலம், சனி மண்டலம் ஆகியவை உள்ளன. அவற்றிற்கு மேல் சப்தரிஷி மண்டலம், துருவ மண்டலம் உள்ளன. இவை `சுவர் லோகம்’ எனப்படும்.இவற்றிற்குமேல் `மஹர்லோகம்’, அதற்குமேல் `ஜனலோகம்’ அதற்கு மேல் `தபோலோகம்’ உள்ளது. இதற்கு மேல் பிரம்மாவின் `சத்திய-லோகம்’ உள்ளது.ஆக, மேலே ஏழு உலகங்களையும், கீழே ஏழு லோகங்களையும் கொண்டது `பிரஹ்மாண்டம்’ ஆகும்.பூமியை அய்ந்து கண்டங்களாகப் புவி இயலார் பிரித்திருக்கின்றனர்.இந்துமதப் புராணீகர்கள் ஏழு கண்டங்களாகப் பிரித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றைச் சேர்த்து ஆறாம் கண்டம் என இப்போது அழைக்கின்றனர். ஆகவே இந்துமதப் புராணம் ஏழு தீவுகள் எனக் கூறுவது கூடப் பரவாயில்லை. ஆனால் அத்தீவுகளில் அடங்கிய நாடுகளைப் பற்றிய விவரம் தந்தால் நாமேகூட `அட்லஸ்’ போடலாம்!இந்திய நாடு (பாரதவர்கம்) எட்டுப் பிரிவாக உள்ளதாம்.

எப்படி? இந்தியாவைத் தீவுக்குறை (தீபகற்கம் (Peninsula)என்று தான் கூற வேண்டும். ஆகவே இந்தியா தீவு அல்ல. இது புராணத்தின் முதல் குறை. எட்டுத் தீவுகளாக இந்தியா இருக்கிறது, ஒன்பதாம் தீவு கடலில் மூழ்கி விட்டது எனப் புராணம் கூறுவது முற்றிலும் குறை. அல்லவா?

பாதாள லோகமாம். ஏழு உலகங்களாம். அழகிய உலகங்களாம். பொன்னும் மணியும் குவிந்து கிடக்கின்றனவாம். இந்தப் பூதேவர்கள் ஏன் அந்த ஏழு பாதாள உலகங்களை விட்டுவிட்டுப் பூவுலகத்திற்கு வந்தனர்?மண்ணிலிருந்து விண் வரை இந்தப் பூமி பரவியிருக்கிறதாம்! பீம்சிங், இது என்ன புதுக்குழப்பம்? வரிசயாக சூரிய மண்டலம், சந்திர மண்டலம், புதன், சுக்கிரன், அங்காரகன், குரு, சனி, சப்த ரிஷி மண்டலம், துருவ லோகம் எனப் பலப் பலப் பிரிவுகள் உள்ளனவாம். பால் விதியை புராணீகர்கள் இப்படிப் புளுகி வைத்திருக்கின்றனர்.

இதே விசயம்பற்றி விஷ்ணு புராணம் எப்படி புளுகுகிறது? ஏழு உலகங்கள் பூமிக்குக் கீழே ஒன்றன்கீழ் ஒன்றாய்த் தட்டுகள் போல் அமைந்துள்ளன எனக் கூறுகிறது. ஆக, இந்தப் புளுகர்களின் கருத்துப்படி பூமியும் தட்டை; பாதாள உலகங்களும் தட்டைதான். அறிவியல் கருத்துக்கு எதிரான மூடக் கருத்து அல்லவா?

எல்லாவற்றிற்கும் கீழே ஆதிசேஷன் என்ற ஆயிரம் தலைப்பாம்பு படுத்துக் கிடக்கிறதாம். அது கொட்டாவி விடுகிறதாம். அதனால்தான் நில நடுக்கம் ஏற்படுகிறதாம். சுனாமி ஆதிகேகனால்தான் வந்தது, வருகிறது என்று இந்த நூற்றாண்டுப் புராணம் ஒன்றைப் புதிதாக எழுதிச் சேர்த்து விடுவார்கள். நடக்கலாம்!பூமிக்குமேல் இலட்சம் யோசனை தூரத்தில் சூரிய மண்டலமாம். அதற்கும் மேலே அதே அளவு தூரத்தில் சந்திர மண்டலமாம்! சரியா?

பூமிக்கு அருகில் சந்திரனும் தொலைவில் சூரியனும் என்பதுதான் உண்மை. அறிவியல் கண்டுபிடிப்பு, எல்லாமே! புராணம் நேர்மாறாகப் புளுகுகிறது.இப்படி மொத்தமாகப் புளுகுகளின் மூட்டைதான் புராணம்!

இந்தப் புளுகர்கள் சூரியனைப்பற்றி எழுதி வைத்திருப்பதைப் பார்ப்போம்.சூரியன் அவனது ரதம்சூரியனுடைய தேருக்கு ஒற்றைச் சக்கரமே உள்ளது. சக்கரத்தில் `மஹாக்ஷம்’ என்னும் அச்சு உள்ளது. இந்தச் சக்கரம் `ஸம்வத்ஸரம்’ எனப்படும் காலச்சக்கர சொரூபமாக உள்ளது.

முற்பகல், நண்பகல், பிற்பகல் மூன்றும் அச்சாகிய இருசைக் கோக்கும் இடம்.ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடா வஸ்த்ரம், அநுவஸ்தரம், இத்வத்ஸரம் ஆகிய ஐவகை வருஷங்கள் அந்தச் சக்கரத்தின் ஆரக் கால்கள் ஆகும். ருதுக்கள் ஆறும் வட்டக் கால்கள். காயத்திரீ, ப்ருஹதீ, உஷ்ணிக், ஜகதீ, திருஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி ஆகிய ஸப்த சந்தஸ்ஸுகள் ஏழு குதிரைகளாகும். துருவனை ஆதாரமாகக் கொண்ட சிறிய அச்சு. தேரின் பெரிய அச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது.சூரியனே `தேவயான மார்க்கம்’ அது அர்ச்சிராதி மார்க்கம் எனவும் சொல்லப்படும். புண்ணிய கர்மாக்கள் செய்பவர் சொர்க்கம் செல்லப் பயன்படும் வழி `பித்ருயாணம்’ என்றும் `தூமாதி மார்க்கம்’ என்றும் அழைக்கப்படும்.

சூரியனில் ஒரு போதும் வெப்பமும், ஒளியும் குறைவதில்லை. ஆனால், காலையிலும், மாலையிலும் குறைந்துள்ளது போல் காணப்படு-வது வெகு தூரத்தில் இருப்பதாலேதான் உண்மை நிலையல்ல அது.இரவு, பகல் நேரங்களில் மாறுதல்புஷ்கர த்வீபத்தின் மையப் பிரதேசத்தில் சூரியன் முப்பதில் ஒரு பாகத்தை அடையும்போது முஹுர்த்த காலம் ஏற்படுகிறது.

ஆகவே, சூரிய கதியைக் கொண்டு முப்பதில் ஒரு பாகம் ஒரு முஹுர்த்த காலம் என்று கணக்கிடப் பட்டுள்ளது.சூரியன் தக்ஷிணாயன காலத்தில் பன்னிரண்டு முஹூர்த்த கால அளவில் பதின்மூன்றரை நக்ஷத்திரங்களைக் கடந்து மிகப் பெரிய பூமியைக் கடக்கிறான். இரவு காலத்தை பதினெட்டு முஹூர்த்த காலத்தில் கடக்கிறான். அதனால் பகற்பொழுது குறைந்தும், இரவுப் பகுதி நீண்டும் தோன்றுகிறது.உத்தராயண காலத்தில் சூரியனுடைய கதி வேறு விதமாக அதாவது, நேர்மாறாக அமைகிறது.சூரியன் கடக்கும் மார்க்கம் ஒரே அளவு உடையது எனினும் உத்தராயண, தக்ஷிணாயன காலங்களில் ராசி மண்டலங்களை சூரியன் கடக்கும் வகையினால் இரவு பகல்களில் ஏற்றத் தாழ்வு உண்டாகிறது.

சூரியன் விஷ்ணுவின் அமிசமானவன். அந்த ஒளிமயமான சூரியனுக்குள் நிர்விகாரமான பிரம்மம் இருக்கிறது. அதுவே பிரணவத்தின் பொருளாகப் பொருந்தி நிற்கிறது. எனவே, பிரணவம் என்னும் பிரம்மம்தான் சூரியனை இயக்குகிறது.கால அளவுபதினைந்து நிமிஷங்கள் ஒரு காஷ்டை: முப்பது காஷ்டைகள் ஒரு கலை. முப்பது கலை ஒரு முஹூர்த்தம். முப்பது முஹூர்த்தங்கள் கொண்டது இரவு பகல் ஒரு நாள். பதினைந்தாம் முஹூர்த்தம் ஸந்தியா ஆகும்.சூரியன் உதித்து மூன்று முஹூர்த்த காலம் `பிராதக் காலம்’ ஆகும். அடுத்து மூன்று முஹூர்த்த காலம் `ஸங்கவம்’ அதன் பின் மூன்று முஹூர்த்தம் `மத்யாஹ்நம்’ அதற்கு மேல் மூன்று முகூர்த்தம் வரை `அபராஹணம்’ அதன் பிறகு மூன்று முகூர்த்தம் வரை `ஸாயாஹ்நம்’ என்றும் பெயர் பெறும். 15 நாட்கள் 1 பக்ஷம். இரண்டு பக்ஷம் 1 மாதம். 2 மாதங்கள் 1 ருது. 3 ருதுக்கள் அயனம். 2 அயனங்கள் 1 ஆண்டு என்ற கால அளவு சூர்ய கதியினால் கணக்கிடப்பட்டவை.

சூரியகதி,சூரிய நாராயணன்சூரியன் ஸஞ்சரிக்கும் உத்தராயண, தக்ஷிணாயனங்களின் நடுவில் உள்ள ஆகாயத்தின் அளவு 183 கிராந்தி வட்டமாகும். இதில் சூரியன் உத்தராயணத்தில் ஏறி தக்ஷிணாயனத்தில் இறங்கிச் செல்கிறான் என்றும், எனவே 366 கதிகள் ஆகின்றன என்றும், அதன்படி சூரியன் ஒரு வருஷத்தைக் கழிக்கிறான் என்றும் அறிக.சூரியனுடைய தேர் ஆதித்தியர்கள் எனப்படும் தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், அப்சரசுகள், யக்ஷர்கள், ஸர்ப்பங்கள், ராக்ஷசர்கள் ஆகியோரால் அதிஷ்டானம் செய்யப் பட்டிருக்கிறது.ஒவ்வொரு மாதத்திலும் இதனைச் செலுத்துபவர் வெவ்வேறாக இருப்பர்.

பன்னிரண்டு மாதங்களிலும் ஒவ்வொரு மாதத்திற்கும் வெவ்வேறு எழுவர் சூரியனது தேரில் உலகை ஒளிப்படுத்த வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஸ்ரீ விஷ்ணுவின் சக்தியினால் போஷிக்கப்படுபவரர்களாவர்.ஸ்ரீ விஷ்ணுவின் சக்தி ரிக், யஜுர், சாமம் என்ற மூன்று வடிவமாக உள்ளது.

ப்ரஹ்மா, விஷ்ணு ருத்திரர் ஆகிய மூவரும் விஷ்ணு சக்தியே. இம்மூவகைச் சக்திகளும் ஸ்ரீ விஷ்ணுவின் ஸாத்விக சக்திகள் ஆவர். இந்தச் சக்திகள் எழுவர்க்கும் பொது வானாலும் சூரியனிடமே அதிகமாக அமைந்துள்ளது. இப்படி சூரியனுக்குள் பிரவேசித்து சூரிய அந்தர்யாமியாக விளங்கும் சூரிய நாராயணனே வேதங்களால் துதிக்கப்படுவர்.

வெப்பக்கோளமான சூரியனைத் தேர் என்னும் குதிரைகள் இழுக்கின்றன என்றும் புளுகியிருப்பது போலச் சந்திரனைப்பற்றிப் புளுகியிருப்பதையும் காண்போம்.சந்திரனும் அவனது தேரும்சந்திரனுடைய தேருக்கு மூன்று சக்கரங்கள். தேரின் இடப்புறத்திலும், வலப்புறத்திலும் பத்து வெண்ணிறக் குதிரைகள் கட்டப்பட்டுள்ளன. துருவனை ஆதாரமாகக் கொண்டு விரைவாகச் செல்லும் இந்தத் தேரினால் தான் இந்திரன் நாகவீதி முதலியவற்றில் உள்ள நக்ஷத்திரங்களைக் கடந்து செல்கிறான். சந்திரனுக்கும் உதயாதி காலங்களில் கிரணங்கள் குறைவதும் நிறைவதும் உண்டு.சந்திரனது கலைகள்சந்திரனது கலைகள் பதினாறு ஆகும். அவற்றுள் பதினைந்து கலைகளை தேவர்கள் பருகி வருகின்றனர். கடைசி ஒரு கலையுடன் நிற்கும் சந்திரனைச் சூரியன் `ஸுஷும்னை’ என்ற நாடியினால் தேவர்கள் பானம் பண்ணும், முறையில் வளர்க்கிறான். பதினைந்து நாட்களில் முழுமை பெறச் செய்கிறான். இவ்வாறு முழுமை பெற்ற பூர்ண சந்திரனிடத்தில் உள்ள அமுதத்தினைத் தான் தேவர்கள் பருகிக் களிக்கின்றனர்.

ஸுரிய கிரணங்கள் பலவற்றிற்கும் வெவ்வேறு பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று `ஸுஹும் நா’ மற்றும் `அமா’ என்ற பெயருடைய இரண்டும் உண்டு. கடைசியில் இரண்டே கலைகளுடன் எஞ்சி நிற்கும் சந்திரன் சூரியனுடைய `அமா’ என்ற கிரணத்தில் வசிக்கிறான். இவ்வாறு சந்திரன் `அமா’வில் வசிப்பதால் அன்று `அமாவாஸ்யா’ எனப்படுகிறது.அன்று சந்திரன் செடி, கொடிகளில் வாசம் செய்வதாகவும், அதனால் அமாவாசை அன்று செடி கொடிகளை அழிப்பவன் `பிரம்மஹத்யா’ தோஷத்தை அடைகிறான். அதனால் தான் அமாவாசை அன்று துளசிகூட பறிக்கக் கூடாது.சூரியன் ஒரு நட்சத்திரம். சந்திரன் பூமியின் துணைக்கோள். ஆனால் இந்த இரண்டையும் கிரகங்கள் என்ற கணக்கில் சேர்த்து ஜாதகம் கணிக்கும் புரட்டர்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஆளுக்கு ஒரு தேர் கட்டிப் புளுகி வைத்துள்ளனர்.
சு. அறிவுக்கரசு ( விடுதலை )

தங்கத்தில் தேராம் பெண் கடவுளுக்கு ஒரு கோடி ரூபாய் பாழ்!

சென்னை, ஜூன் 1- சென்னை, மயிலாப்பூரில் முண்டக்கண்ணி அம்மன் கோயில் ஒன்று உண்டு. இந்த அம்மன் சாமி வெளியே போய் வருவதற்கு வாகனம் வேண்டும் என்று அது கேட்கவில்லை. பக்தர்கள் அப்படிப்பட்ட ஒரு வண்டியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். அறிவியல் கண்டுபிடிப்பான கார், விமானம் போன்ற எதையும் செய்யாமல் பழையகாலப் பழக்கப்படி “தேர்” செய்துள்ளனர்.

100 குழி தேக்குமரம் பயன்படுத்தி 150 கிலோ செப்புத் தகடு பதித்து எட்டரை கிலோ சுத்தமான தங்கத்தையும் பயன்படுத்தித் தேர் செய்திருக்கிறார்கள் எட்டு அடி உயரமாம். இதற்கான செலவு ஒரு கோடி ரூபாயாம். ஒரு ஆண்டாகச் செய்து வந்து முடிவடையும் நிலையில் உள்ளதாம்.

இன்று அந்தத் தேருக்குப் பூஜை, புனஸ்காரம் எல்லாம் செய்யத் தொடங்குகிறார்களாம். ஞாயிறு மாலை முண்டக்கண்ணி அம்மன் தெருத்தெருவாக வருமாம். நடந்து வராது. இந்தத் தங்கத் தேரில் உட்கார்ந்து கொண்டு வருமாம். கடவுளச்சியின் சக்தியில் தேர் தானாக நகருமா என்றால் அதுவும் கிடையாது. ஆள்கள் இழுத்துப் போக வேண்டும்.

இவ்வளவு தொல்லைகளைத் தரும் ஏற்பாட்டை இவ்வளவு பணத்தைக் கொட்டிச் செய்ய வேண்டுமா? பக்தர்கள் சிந்திக்க வேண்டும்! சிந்தித்தால்தான் பக்தி போய்விடும் என்கிறீர்களா? அதுதான் சரி! ( விடுதலை 1-06-07 )

இது ஒரு புதுவகை மோசடி!

இது ஒரு புதுவகை மோசடி!

தாம்பரம், ஜடூன் 1 யாகம், ஹோமம் என்றெல்லாம் மக்களை ஏமாற்றும் மோசடி இன்னும் நடந்து வருகிறது. ஏமாறுபவர்கள் இருப்பதால் ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனாலும் சிந்தனை சக்தி சிறிதும் இல்லாத மக்களைப் பலவித ஆசைகள் காட்டி ஏமாற்றுகிறார்கள். மணவாழ்க்கைக்குத் தோசம் இருக்கிறது, அதைக் கழிக்க வேண்டும், இன்ன சடங்கு செய்ய வேண்டும் என்று அப்பாவி மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் சோதிடர் கூட்டம் குறையவேயில்லை.

பெண்களுக்குத் திருமணம் செய்து ஒருவன் கையில் “பிடித்துக் கொடுத்துவிடவேண்டும்” என்கிற அவசரம் தற்காலத்தில் பெற்றோர்களிடம் பரவலாகக் காணப் படுகிறது. வசதி குறைந்த மக்களிடம் தான் இந்த அவசரம். அதனைப் பயன்படுத்திக் கொண்டு மோசடிகள் செய்கிறது ஜோதிடப் புரட்டர் கூட்டம்.

இப்போது ஒட்டுமொத்தமாகத் தோசம் கழிக்க ஹோமம் செய்கிறார்களாம். தோசம் இருப்பவர்கள் இல்லாதவர்கள் எல்லாருக்குமாக ஹோமம் நடத்துகிறேன் என்கிறார்கள். தனித் தனியேதானே தோச பரிகாரம் செய்ய வேண்-டும் என்று கூறுகிறார்கள்; நீங்கள் மொத்தமாகச் செய்கிறீர்களே என யாரும் கேட்பதில்லை.

ஆகவேதான் தாம்பரம் கவுரிவாக்கத்தில் உள்ள கோயிலில் சுயம்வரகலா பார்வதி ஹோமம் என்கிற பெயரில் ஓர் ஏற்பாடு. பணவசூல் ஏராளம். கொட்டிக் கொடுக்கத்தான் பக்தர்கள் உள்ளனரே! பார்ப்பனர் வீட்டில் மழை! திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? ( விடுதலை 1.06.07 )