Followers

Thursday, May 31, 2007

மடமையை வளர்த்துக் காசு பார்க்கிறார்கள் பனிலிங்கம் என்று மோசடி செய்து

மடமையை வளர்த்துக் காசு பார்க்கிறார்கள் பனிலிங்கம் என்று மோசடி செய்து . - சு.அறிவுகரசு

பனி லிங்கம். கடந்த ஆண்டு இது சரிவர உருவாகவில்லை ஏன்? என்ன தெய்வக் குற்றம்? பனிலிங்கம் என்று மோசடி செய்து மடமையை வளர்த்துக் காசு பார்க்கிறார்கள்.அமர்நாத் பனி லிங்கம். ஆண்டுதோறும் இதைப் பார்க்க ஆயிரக்கணக்கில் இந்து மதப் பக்தர்கள் கூடுகின்றனர். என்ன அதிசயம் இதில்? ஆம், அதிசயம் என்கின்றனர். பனியால் லிங்கம் தானாகவே சுயம்புவாகவே உருவாகிறது என்கிறார்கள். பின்னர் கரைந்துவிடும் போல !

அடுத்த ஆண்டு அதே சீசனில் இது உருவாகும். பக்தர்கள் தரிசிப்பர். மூடத்தனம் வளரும்.கடந்த ஆண்டு இது சரிவர உருவாகவில்லை ஏன்? என்ன தெய்வக் குற்றம்? தெரியவில்லை. தெரிவிக்கப்படவில்லை. என்ன செய்தார்கள்? இவர்களே உருவாக்கினார்கள் பனி லிங்கத்தை கடவுளைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா? புகார்கள் எழுந்தன. கவர்னர் விசாரணைக் கமிசன் வைத்தார், கமிசன் பிட்டுப்பிட்டு வைத்தது உண்மைகளை! உத்தமர்களின் வேசம் கலைந்தது. மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை வழக்கு என்றார்கள். முடிவு தெரியவில்லை.கடவுளைக் காப்பாற்றிச் சுயம்பு பனி லிங்கம் எனக் காண்பித்திட என்ன செய்தார்கள் தெரியுமா? சிமெண்ட் கான்கிரீட்டினால் லிங்கம் போலக் கட்டிவிட்டார்கள். அதன் மேல் அய்ஸ்கட்டிகளை அப்பிவிட்டுப் பனி லிங்கம் என்றார்கள்.

செயற்கை தான். சில குளிர் ஆண்டுகளில் இது இயற்கையாக அமையும் என அறிவியல் கூறுகிறது.சுண்ணாம்புக் கல்லினால் ஆன குகைகளில் பனி நீர் வடிவதால் இப்படிப்பட்ட உரு உருவாகிறது. மேலிருந்து கீழே பனி நீர் சொட்டுவதாலும் உருவாகும். கீழிருந்து மேல் நோக்கி லிங்கம் போல தூண்கள் போல கம்பிகள் போல உருவாகும் குகைகளில் - சுண்ணாம்புக்கல் குகைகளில் இம்மாதிரி உருவாகும்.ஸ்டாலக்டைட்(STALACTITE) என்று அதற்குப் பெயர். குகையின் கூரைப் பகுதியில் இருந்து தொங்கும் லிங்கத்திற்கு அந்தப் பெயர். ஸ்டாலக்மைட் (STALAGMITE ) என்று நிலத்தினின்றும் மேல் நோக்கி எழும் “லிங்கத்திற்கு” பெயர் வைத்திருக்கிறார்கள். சுண்ணாம்புக் கல்குகைகளிலும் சுண்ணாம்புக்கல் பாறைகளிலும் மட்டுமே இவை ஏற்படும்.இதை பனிலிங்கம் என்று மோசடி செய்து மடமையை வளர்த்துக் காசு பார்க்கிறார்கள்.

பனி அதிகமாக இருக்கும் பனிப் பாளங்கள் நிறைந்த குளூ மணாலி பகுதியில் பனி லிங்கம் உருவாகுமா? சுண்ணாம்புக் கல் இல்லாததால் உருவாகாது.இதே மாதிரி பனி லிங்கம் “ஆதென்ஸ் நகரத்திற்குப் பக்கத்தில் கிரீஸ் நாட்டில் உள்ளது. அது போன்றவை நியூசிலாந்து நாட்டின் வைடாமோ குகைகளில் உள்ளன. மெலிதாகவும், மொத்தமாகவும் நூற்றுக்கணக்கில் உருவாகின்றன. நான் கோடையில் போய்ப்பார்த்ததால் பருமன் குறைவாக இருந்தன. குளிர் காலத்தில் இவை மிகப் பருமனாக இருக்குமாம்.

வைடாமோ குகைகளில் மின்மினிப் பூச்சிகள் GLOW WORMS லட்சக்கணக்கில் இருக்கும் காட்சி, பனி லிங்கங்கள்(?) கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் உருவாகிக் கொண்டிருக்கும் காட்சி, நீர், சிற்றாறு போல ஓடிக் கொண்டிருக்கும் காட்சி ஆகியவை பார்க்கும் போது கண்ணைப் பறித்துக் கொள்ளும் அளவுக்குக் கொள்ளை அழகு!காட்டில் புதைந்து மரங்களின் மறைவில் கிடந்த மலையை, குகையை ஒரு வேட்டை நாய் தான் காண்பித்திருக்கிறது. முயலை நாய் துரத்தியது. பின்னால் வேட்டைக்காரன் வந்து கொண்டிருந்தான். திடீரென்று முயலைக் காணவில்லை. மோப்பம் பிடித்துக் கொண்டே நாய் உள்ளே ஓடி விட்டது. தொடர்ந்து வந்த வேட்டைக்காரன் உள்ளே நுழைந்தான். குகையில் அழகில் மனதைப் பறிகொடுத்தான். தன் இனத்து மாவோரி மக்களுக்கு மட்டும் குகையைக் காட்டிக் கமுக்கமாக வைத்து இருந்தார்கள். நாட்டையே பிடித்து அவர்களை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருக்கும் ஆங்கிலேயர்கள் விட்டு விடுவார்களா?அவர்களும் கண்டு களித்து, நாமும் கண்டுகளிக்கும் வகையில் சிறந்த சுற்றுலாத் தலமாக ஆக்கி வைத்துள்ளனர். லிங்க வழிபாடு இல்லாமலே ஆயிரக்கணக்கில் வந்து பார்த்துச் செல்கிறார்கள். ( உண்மை 01-05-07 )

No comments: